Home / Articles / தெற்கின் முதலாளித்துவ தலைவர்களிடம் மீண்டும் ஏமாற வேண்டாம் !

தெற்கின் முதலாளித்துவ தலைவர்களிடம் மீண்டும் ஏமாற வேண்டாம் !

சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாறு முழுவதும், தேசிய இனப் பிரச்சினை உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தமிழ்த் தலைவர்கள் தென்னிலங்கையின் சிங்கள முதலாளித்துவத் தலைவர்களை நம்பி அவர்களுக்குப் பின்னால் சென்றனர். ஜீ.ஜீ பொன்னம்பலம் – செல்வநாயகம் முதல் சம்பந்தன் வரையிலான தமிழ் தலைவர்கள் சிங்கள முதலாளித்துவத் தலைவர்களின் பின்னால் இழுபடும் அரசியலையே கடைப்பிடித்தனர். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் கடந்தபோதிலும், தேசிய இனப் பிரச்சினை மோசமடைந்ததே தவிர, ஒரு தசமதானம் கூட முன்னேற்றம் அடையவில்லை. யுத்தத்தின் விளைவாக, 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைக்கூட நடைமுறைப்படுத்த தென்னிலங்கையின் எந்தவொரு ஜனாதிபதியும் நேர்மையுடன் அனுமதிக்கவில்லை. அத்துடன் யுத்தத்தின் போது காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தொடர்பில் இதுவரை ஆட்சி செய்த எந்வொரு சிங்கள ஜனாதிபதியும் நீதியை நிலைநாட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தப் பின்னணியில், எதிர்காலத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து புதிய விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பிக்க வேண்டும். பழைய பாரம்பரிய அரசியல் கட்டமைப்பிலிருந்து விடுபட்டு, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்தபட்ச பொதுவேலைத்திட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும். சிங்களப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் தென்னிலங்கைத் தலைவர்கள் தற்போது தமிழ் மக்களுக்கு தேசிய இனப் பிரச்சினை என்று ஒன்று கிடையாது என்பது போல் கருதி செயற்படுகின்றனர். உண்மையில் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும்,ஒன்றிணைந்த சக்தியாகச் செயற்பட்டால், சிங்களத் தலைவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும் மேலைத்தேய முதலாளித்துவ அரசுகளோ அல்லது மோடி போன்ற இந்திய முதலாளித்துவத் தலைவர்கள் ஊடாகவோ சிங்கள முதலாளித்துவத் தலைவர்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு உதவியும் ஆதரவும் பெறலாம் என்ற எண்ணம் முற்றிலும் தவறானது. மோடியின் பாரதீய ஜனதா கட்சியை நிராகரிப்பதன் மூலம், தமிழக தமிழ் மக்கள் மோடி பின்பற்றும் இந்துத்துவ தேசியவாத அரசியலைப் புறக்கணிப்பதையே காணமுடிகிறது.

அதேசமயம் சுமார் 2 வருடங்களாக ஜனாதிபதி பதவியில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க,தனது ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படுவதாகக் காட்டிக்கொள்கின்றார். பொலிஸ் அதிகாரங்களைத் தவிர ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என அவர் கூறுவது அப்பட்டமான ஏமாற்று வித்தையாயாகும். இதன் மூலம் ரணில் எவ்வளவு தூரம் சிங்கள இனவாத சக்திகளுக்கு அடிபணிந்துள்ளார் எனப் புரிகிறது. தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற ஏமாற்று வேலைகளை நிறுத்திவிட்டு, 8 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலையாவது நடத்த ஏற்பாடு செய்யுமாறு ரணிலுக்கு சவால் விட வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் சட்டப் பிரச்சினையை தீர்த்து உள்ளுாராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பை நடத்த முடியும் என்ற உண்மையை அவர் திட்டமிட்டு மூடிமறைத்துள்ளார்.

இந்தப் பின்னணியில், தெற்கில் உள்ள உழைக்கும் வர்க்கம் மற்றும் வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தலைமையிலான உண்மையான இடதுசாரி சக்திகளின் வெளிப்படையான ஆதரவுக்கான இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். வடக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரே கட்சி என்ற வகையில் ஐக்கிய சோசலிசக் கட்சி இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் ஒன்றிணைந்த இடதுசாரி சக்தியைக் கட்டியெழுப்புவதன் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு சிங்கள, தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம். கடந்த காலம் முழுவதும் ,வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பல்வேறு அழுத்தங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக ஐக்கிய சோசலிசக் கட்சி போராடியுள்ளது. சிங்கள இனவாத கோஷ்டிகள், தமிழ் மக்களின் உரிமைளை ஒடுக்குவதற்கும் பறிப்பதற்கும் எதிராக வடக்கிலும் தெற்கிலும் ஐக்கிய சோசலிசக் கட்சி பகிரங்கமாகத் தொடர்ந்து போராடி வருகிறது.

  •  வடக்கின் இயற்கை வளங்களை வெளிநாட்டுக் கொள்ளை வியாபாரிகள் சூறையாடுவதை அனுமதிக்காதே !
  •  தேசியஇனப் பிரச்சினையைத் தீர்க்க வடக்கு-தெற்கு இணைந்த இடதுசாரி சக்தியைக் கட்டியெழுப்புவோம் !
  •  போரின் போது தமிழர்களிடம் இருந்து இராணுவம் பறித்த காணிகளை மீள வழங்கு !
  •  தொல்லியல் என்றப் பெயரில் வடக்கு கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கலை நிறுத்து!
  •  இந்தியக் கள்ள வியாபாரிகளிடம் இருந்து வடபுலத்தின் கடல் பிராந்தியத்தைக் காப்பாற்றி ,வடக்கில் வாழும் மீனவர்கள் கடலில் சுதந்திரமாகப் பயணிக்கும் உரிமைக்கு உத்தரவாதம் வழங்கு !

About Taniya

Scroll To Top