Home / Articles / தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்ன ?

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்ன ?

தமிழ் மக்களின் சமூக பொருளாதார, தேசிய உரிமைகள் ஏன் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது?

தெற்கில் இனவாத சக்திகள் பலப்படுவதற்கும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தாக்கப்படுவதற்கும் தொடர்புண்டு. தெற்கு அரசியற் சக்திகள் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்ட இன்றும் இனவாத சக்திகளையும் – இனவாத திரட்சியையும்தான் நம்பி இருக்கிறார்கள்.
சமூகப் பொருளாதர மேம்பாட்டை சிங்கள மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்காத கொள்கைகளை முன்னெடுப்பவர்கள் இவர்கள். வாழ்வாதாரத்தை முன்னேற்றும் அடிப்படையில் தங்களுக்கான ஆதரவை இவர்களால் திரட்ட முடியாது. தமிழ் பேசும் மக்கள்தான் எல்லாவகைப் பின்னடைவுக்கும் காரணம் என்பது போலவும், தாம் சிங்கள மக்களை முதன்மைப்படுத்திய கொள்கை உடையவர்கள் எனக் காட்டிக் கொள்ளவும், தமிழ் மக்கள் மேலான தாக்குதல் இவர்களுக்கு உதவி வருகிறது. இந்த அடிப்படையில் திரட்டப்படும் சிங்கள பௌத்த இனவாத சக்திகள்தான் தெற்கு அதிகாரத்தை தாங்கி நிற்கிறார்கள்.
தெற்கில் இயங்கும் எந்த ஒரு பாராளுமன்ற கட்சியும் தமிழ் மக்களளின் அபிலாசைகளை பிரதிபலிப்பன அல்ல. ஐக்கிய தேசியக் கட்சி தொடங்கி ராஜபக்ச குடும்ப கட்சியான பொதுஜன பெரமுன ஈறாக அனைத்துக் கட்சிகளும் இனவாத கட்சிகளே. ஐ.தே.க யில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதாச அரசியற் காரனங்களுக்காக பிரிந்து செல்லவில்லை. அதிகாரப் போட்டி மட்டுமே இவர்களை பிரித்து நிற்கிறதே தவிர சமூக பொருளாதாரக் கொள்கைகள் அல்ல.
தம்மை மார்க்சிய கட்சியாக காட்டிக் கொள்ளும் ஜே வி பி மற்றும் அவர்கள் தலைமையில் இயங்கும் என் பி பி (தேசிய மக்கள் சக்தி) அமைப்பும் தமிழ் மக்களின் உரிமைகளை முன்னெடுப்பதில்லை. 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதைக்கூட எதிர்த்து நிற்கிறது என் பி பி. வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க கூடாது என நீதி மன்றம் சென்று போராடியது – ராஜபக்ச அரசு தனது கொடூரத்தைத் தொடர முண்டு கொடுத்து நின்றது- இறுதி யுத்த படுகொலைகளின் போதுகூட சத்தம் போடாமல் முதலாளித்துவ சக்திகளுக்கு ஆதரவாக நின்றது போன்ற தமிழ் மக்களுக்கு எதிரான நீண்ட வரலாற்றைக் கொண்டது ஜே வி பி. தாம் செய்த எந்த தவறுகளையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. குறிப்பாக தமிழ் மக்களின் தேசிய உரிமையை நசுக்கும் அவர்கள் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. இத்தகைய எந்த கட்சிகளுக்குமே தமிழ் மக்கள் ஆதரவு வழங்க முடியாது.

தமிழ் தலைமைகள் என சொல்லிக் கொள்ளும் கட்சிகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கின்றனவா?

முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளால் சிங்கள மக்கள் மட்டுமல்ல அனைத்து மக்களுமே பாதிக்கப்படுகிறார்கள். இன்று தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் இலங்கையிலேயே வறிய பிரதேசங்களாக இருக்கிறது. வறிய மக்களின் வயிற்றில் அடிக்கும் கொள்கைகளுக்கு தெற்கு பாராளுமன்றத்தில் வாக்ககளித்துவிட்டு வடக்கு வந்து அவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கிறோம் என சொல்வது வெறும் போலி அரசியல்.
தமிழ் மக்கள் இத்தகைய போலி அரசியல் நடவடிக்கைகளை புறந்தள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமக்கான தனிப்பட்ட அரசியல் அமைப்பை உருவாக்க முன்வரவேண்டும். தூர நோக்குள்ள அரசியற் பார்வை – தெளிவான திட்டமிடல் – கொள்கை சமரசமற்ற தலைமை ஆகிய அடிப்படையில் அத்தகைய அமைப்பு உருவாக வேண்டும்.

பொருளாதார மேம்பாடு, அனைத்து சனநாயக உரிமைகளையும் பெறுவது போன்ற நிலைப்பாடு தமிழ் மக்களின் தேசிய கோரிக்கையோடு பின்னிப் பிணைந்ததாக இருந்து வந்திருக்கிறது. உரிமைகள் மறுப்புத்தான் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய கோரிக்கை முதிர்ச்சிபெற காரணமாக இருந்து வந்திருக்கிறது. இவற்றைப் பிரித்துப் பார்க்க முடியாது. பொருளாதார மேம்பாட்டை மறுக்கும் சக்திகளோடு சேர்ந்து நின்று தேசிய உரிமை பெறலாம் எனப் பேசுவது தவறு. இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தமது பொருளாதார நலன் மற்றும் பூகோள அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே இலங்கை அரசுக்கு நெருக்கடி வழங்கும். தமிழ் மக்கள் மேம்பாட்டுக்காக அல்ல. இவற்றை சரியாக புரிந்து கொண்டு மக்களின் நலன்களை முன்னெடுக்கும் அரசியல் அமைப்பு கட்டி எழுப்பப்பட வேண்டும்.

மாணவர்கள், இளையோர் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், சிறந்த நோக்குள்ள சிவில் சமூக செயற்பாடாளர்கள், சோசலிஸ்டுகள் இந்த நடவடிக்கையை எடுக்க முன்வரவேண்டும். அத்தகைய அமைப்பு எத்தகைய கொள்கைககளை முன்வைக்க வேண்டும் என்ற உரையாடல் தொடங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் பலம் சரியான கொள்கை வரைவு மூலம் ஏற்படுத்திக் கொள்ள முடியும். வெறுமனே வார்த்தையில் மட்டும் ஒற்றுமை எனப் பேசுவது ஒருபோதும் நிலைத்து நிற்கப் போவதில்லை என்பதை வரலாறு எமக்கு தொடர்ந்து போதித்து வருகிறது. கூட்டமைப்பின் தலைமைக்கான சமீபத்து அடிபாடுகள் இதை மேலும் தெளிவுபடுத்தி உள்ளது.

சோஷலிச கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்த போராட்டம் மூலம் அனைவரின் உரிமைகளையும் பெற முடியும் எனத் தொடர்ந்து வாதித்து வந்திருக்கிறது ஐக்கிய சோஷலிச கட்சி. தமிழ் மக்களின் பிரிந்து போகும் உரிமை உற்பட சுய நிர்ணய உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறது ஐ.சோ.க. முதாளித்துவ பொருளாதார கொள்கைகளின் நீட்சிதான் தமிழ் மக்கள் மேல் நடந்த – தொடர்ந்து நடந்துவரும் தாக்குதல்கள். சோஷலிச மாற்றுக்காக எனப் போராட எழுந்த இளையோர் உருவாக்கிய போராட்ட அரசியலின் மேல் நின்று கொண்டு அப்பட்டமான முதலாளித்துவ கதிரை அரசியல் செய்யும் அனைவரது அரசியலையும் மக்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என சொல்லிக்கொள்வது மட்டும் போதாது. எத்தகைய உரிமைகளை முன்னெடுக்கிறார்கள் என்ற தம் முழுமையான கொள்கை நிலைப்பாட்டை அவர்கள் முன்வைக்க வேண்டும். ஒவ்வொரு சனாதிபதி தேர்வின் பொழுதும் ஏதோ ஒரு தெற்கு முதலாளித்துவ பிரதிநிதிக்கு ஆதரவு வழங்குவதே தமிழ் மக்களின் கடமை என்பதே அவர்கள் நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மை தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் தெற்கு முதலாளித்துவ சக்திகளின் பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவாகவே வாக்களித்து வந்திருக்கின்றனர்.

போராட்ட அரசியலை கைவிட்ட எந்த அரசியல் நிலைப்பாடும் தமிழ் மக்களின் எந்த உரிமைகளையும் பெற்றுத் தந்துவிடப்போவதில்லை. சோஷலிச போராட்டத்தை நோக்கி நகர வேண்டும் என கருதும் அனைவரையும் எம்மமோடு உரையாடும்படியும் – இணைந்து வேலை செய்ய முன்வரும்படியும் நாம் கோருகிறோம். தமிழ் மக்களுக்கான சரியான அரசியல் எதிர்காலத்தை நிலைநாட்டும் அமைப்பாக நாம் திரளாமல் எந்தக் கோரிக்கைகளை நாம் வென்றெடுக்க முடியாது. அதற்கான வேலைகளை ஐ. சோ.க தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுத்துவரும் பல தமிழ் இளையோர்களோடு இணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். இவை பற்றித் தெரிந்து கொள்ள – இணைந்து வேலை செய்ய எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

About Taniya

Scroll To Top