Home / Articles / மலையகம் 200

மலையகம் 200

மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின.

தமிழ்நாட்டில் இருந்து மக்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு இருநூறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்நாள்வரை அவர்கள் அடைந்துவரும் துன்பங்களும் இழந்த உரிமைகளும் தமிழ்நாட்டில் உணர்வுப்பூர்வமாக பேசப்படவே இல்லை. 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம் பல்லாயிரக்கணக்கானோரைக் காவு கொண்டது. பொருளியல் நெருக்கடியில் இருந்து கிராமங்கள் மீள முடியவில்லை. இந்த சூழ்நிலையில் தான் காலனிய நாடுகளுக்கு தமிழர்கள் கூலிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின. காபி, இரப்பர், உலகத் தரம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவர்கள் குடியமர்த்தப்பட்ட அந்த மலைப்பகுதிதான் மலையகம் என்றழைக்கப்படுகிறது.
நகரங்களில் தூய்மைப் பணியாளர்களாகவும், ஆலைத் தொழிலாளர்கள் முதல் வீட்டுப் பணியாளர்களாகவும் இன்று நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.1817 ஆம் ஆண்டில் இந்த இடப்பெயர்வு தொடங்கியது என்றாலும் 1823 இல் நடைபெற்ற இடப்பெயர்வே பொதுவாக கணக்கில் எடுக்கப்பட்டு ‘மலையகம் 200″ என்று அடையாளப்படுத்தப்படுகிறது. உலகத் தமிழர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் ‘மலையகம் 200″ நிகழ்வுகளைத் தமிழர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய கப்பல்களில் நம் மக்கள் எழுப்பிய ஓலமும் மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடந்துசெல்லும் பொழுது பலியானவர்கள் எதிர்கொண்ட தருணங்களும் நமக்குத் தெரியாது. டைட்டானிக் கப்பல் மூழ்கிய கதையை உலகமே அறிந்திருக்க, ஆதிலெட்சுமி கப்பல் மூழ்கிய கதையை தமிழர்களாகிய நாமாவது அறிவோமா? கடல்கடந்து, காடுகடந்து, மலையில் நடந்து இவர்கள் போன கதை என்பது வலி நிரம்பிய ஒரு நீண்ட கதையின் முதல் பாகம் தான். பிரிட்டிஷாரால் இவர்கள் கசக்கிப் பிழியப்பட்டு சுரண்டப்பட்டனர். 1948-ஆம் ஆண்டில் பிரிட்டிஷார், இலங்கையை விட்டு வெளியேறியதும் 10 லட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது இலங்கை அரசு. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 90 விழுக்காட்டிற்கு பங்களித்துக் கொண்டிருந்த மக்கள் நாடற்றோர் ஆக்கப்பட்டனர்!

தங்களின் உழைப்பால் நவீன இலங்கையை உருவாக்கிய இம்மக்களின் தலைவிதியை சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் கையில் ஒப்படைத்துவிட்டுப் போனதற்காக பிரிட்டிஷார் பொறுப்பேற்க வேண்டியவர்களாக உள்ளனர். இந்திய அரசு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் தனக்கென்ன என்றிருந்தனர்! இந்நிலை இன்றுவரை தொடர்கிறது.

இலங்கையில் சிங்களர்களுக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக இருந்தவர்கள் இன்று நான்காம் இடத்தில் உள்ளனர். இலங்கையில் இனத் துடைப்புக்கு (ethnic cleansing) ஆளான முதல் சமூகம் மலையக த் தமிழர்கள்தான் (upcountry tamils)! நாடற்றோர் ஆக்கப்பட்ட அம்மக்களை ஆடு, மாடுகள் போல தங்களுக்கு இடையே பிரித்துக் கொள்ளும் உடன்படிக்கையை இந்தியாவும் இலங்கையும் 1964-ஆம் ஆண்டில் போட்டுக் கொண்டன. 6 தலைமுறையாய் வேர்பிடித்து வாழ்ந்த மக்களைப் பிடுங்கி எறிவதற்கான உடன்படிக்கை அது!

மலையகத் தமிழர்கள்

இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது போக இலங்கையில் எஞ்சியவர்கள் இன்றளவும் இரண்டாம் நிலை குடிமக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். உள்நாட்டிலும் கூலித் தொழிலாளர்களாக பல்வேறு மாவட்டங்களில் சிதறடிக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்ததுபோல் இன்றும் லைன் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பாடுபட்டு உருவாக்கிய நிலத்தில் அவர்களுக்கு எந்தப் பங்குமில்லை. கல்வி, சுகாதாரத்தில் ஏனைய இனச் சமூகங்களைவிட மிகவும் பின்தங்கியுள்ளனர். வெறுங்கையோடு போய் பல தலைமுறைகள் இருந்து வளங்கொழிக்கும் தோட்டங்களை உருவாக்கி, பின்னர் வெறுங்கையோடு திருப்பி அனுப்பப்பட்டவர்களைத்தான் தாயகம் திரும்பியோர் (சுநியவசயைவந) என்கிறோம்!

இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களை அவர்தம் உறவுகள் ஏற்க மறுத்தன. ஆடு, மாடுகளைப் போல் பிரித்து கூடலூருக்கும் வால்பாறைக்கும் கொடைக்கானலுக்கும் அனுப்பியதோடு கேரளத்திற்கும் ஆந்திரத்திற்கும் கர்நாடகாவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். உடன்படிக்கை முழுமையாக செயல்படுத்தப்பட்டதா? வந்தவர்கள் நிலை என்ன? யாரிடமும் பதில் இல்லை என்பதல்ல அவலம். இதுவரை யாரும் இந்தக் கேள்விகளைக் கேட்கவேயில்லை என்பதுதான் அவலம்!

1964, 1974 உடன்படிக்கைகளில் இவர்களின் தாய்நாடு எது என்ற தலைவிதியை எழுதினார்கள். 1977, 1981, 1983 இல் தமிழருக்கு எதிராக அரசு ஆதரவுடன் இன வெறியாட்டம் நடத்தப்பட்டது. ஈழ மக்களின் தாயகத்தில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள் ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்களும்தான்! 1980களில் ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற்றது. இராணுவப் பிடியில் இருந்து உயிருக்கு அஞ்சி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, மலையகத்தில் இருந்து தப்பிப் பிழைத்து வடக்கு, கிழக்கில் தஞ்சம் புகுந்திருந்த மலையகத் தமிழர்களும்தான்! எந்த மண்டபம் முகாமில் இருந்து கூலிகளாக கப்பலில் ஏற்றப்பட்டார்களோ அதே மண்டபம் முகாமில் அவர்களின் தலைமுறையினர் நாடற்றோராக தஞ்சம் புகுந்தனர். படகில் வந்தவர்கள் என்ற காரணத்தின் பெயரால் ‘சட்டவிரோத குடியேறிகள்” என்று இந்திய ஒன்றிய அரசு இவர்கள் மீது முத்திரை குத்தியது. பிரிட்டிஷார் உருவாக்கிய செயற்கைப் பஞ்சத்தால் தாய்மண்ணை விட்டு வெளியேற நேர்ந்தவர்களின் தலைமுறைகள் இன்று இலங்கையில் மலையகத் தமிழர்களாகவும் தமிழகத்தில் தாயகம்திரும்பிய தமிழர்களாகவும் முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நாடற்றோராகவும் வாழ்ந்துவருக்கின்றனர். நான்காவது பிரிவினராக, உலகின் பல்வேறு நாடுகளில் குடிமக்களாகவும் ஏதிலிகளாகவும் சிதறியுள்ளனர். இவர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கோரிக்கைகள்

அடிப்படை ஊதியக் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும். அவர்கள் கோரும் ஆயிரம் ஷரூபாய் ஊதிய உயர்வு உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும். காலம் காலமாக வாழ்ந்து வரும் நிலத்தின் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நிலமற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் நில உரிமை வழங்கப்பட வேண்டும். தேவையான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். சிறுவர்கள் நீண்ட தொலைவு சென்று கல்வி கற்கும் நிலை மாற புதிய கல்விக்கூடங்களை உருவாக்கும் முதலீடு செய்யப்பட வேண்டும். போக்குவரத்து வசதிகள் புதிப்பிக்கப் பட்டு அனைத்து தொழிலாளர்களும் பயனடையும் முறையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

மலையகத்தில் இருந்து வலிந்து துரத்தப்பட்ட பலர் இந்திய முகாம்களிலும் வெளியேயும் ஏதிலிகளாக தொடர்ந்து துன்புற்று வருகிறார்கள். அவரகள் வாழ்வாதாரம் முன்னேற தமிழ் நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியக் குடியுரிமை கோருவோருக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அனைவருக்குமான நில உரிமை மற்றும் வாழ்வாதார உதவி உறுதி செய்யப்படவேண்டும்.

மலையகத் தமிழர்கள் தனித்துவமான மக்கள் சமூகம் என்பதை இலங்கை சட்டத்தில் அங்கீகரிக்கவேண்டும். அதன்மூலம் எந்த பாகுபாடுமற்ற அனைத்து உரிமைகளும் இந்த மக்களுக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும். இலங்கையில் ஒற்றை ஆட்சி முறை மாற்றப்பட்டு மக்கள் தம்மைத்தாமே நிவகித்துக் கொள்ளும் வகையில் மலையாக தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

About Taniya

Scroll To Top